கனடாவின் ரொறன்ரோவின் தமிழ் இருக்கைக்கு தமிழக அரசு ரூ 1 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. இந்த தகவலை தமிழ் இருக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், இந்தியாவில் உள்ள முன்னணிப் பல்கலைக்கழகங்களில் தமிழ் வளர்க்கும் திட்டத்தின் தொடர்ச்சியாக லண்டன் ஆக்ஸ்போர்டு, ஜோகன்ஸ்பர்க், மலேசியா, இலங்கை யாழ்ப்பாணம் மற்றும் வெளிநாட்டுத் தமிழ் இருக்கைகளின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கப்படும்.

இதன் தொடர்ச்சியாக கனடாவின் சர்வதேசக் கல்வி மையமான ரொறன்ரோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்கு நன்கொடையாக ஒரு கோடி ரூபாய் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டது.

கனடாவில் முதல் இடத்தில் உள்ள ரொறன்ரோ பல்கலைக்கழகமும் கடந்த பல வருடங்களாகத் தமிழ் மரபைக் கொண்டாடி வருகிறது.

ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கு உதவி செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் எழுதியது தமிழ் இருக்கை அமைப்பு. அதன் பயனாக தற்போது ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டிருக்கிறது.

ரொறன்ரோ பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்கத் தேவையான வைப்பு நிதி 3.0 மில்லியன் டொலர்கள். இந்நிலையில் , கனடா வாழ் தமிழ் மக்கள் ஏற்கெனவே 2.44 மில்லியன் டொலர்களைத் திரட்டிவிட்டார்கள்.

எஞ்சிய தேவை 5,60,000 டொலர்கள் மட்டுமே. இதில் இப்பொழுது தமிழ்நாடு அரசு ஒரு கோடி வழங்கிவிட்டதால் மேலும் தேவைப்படும் நிதி 2.2 கோடி ரூபாய் மட்டுமே. உலகத் தமிழர்களின் உதவியால் இது விரைவில் சாத்தியமாகிவிடும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரொறன்ரோவில் அமையும் தமிழ் இருக்கையின் வெற்றி தமிழின் வெற்றியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top