வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளைக் குரங்குகள் தூக்கிச் சென்றதில், ஒரு குழந்தையைக் குரங்கு குளத்தில் வீசியதால் இறந்ததாகவும் உறவினர்கள் சத்தம் போட்டதால் மற்றொரு குழந்தையைக் கீழே போட்டுவிட்டுச் சென்றதால் அந்தக் குழந்தை உயிர் பிழைத்ததாகவும் தமிழக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“தஞ்சாவூர் மேலவீதி கோட்டை அகழியைச் சேர்ந்தவர் ராஜா (29). இவரது மனைவி புவனேஸ்வரி (26). இவர்களுக்குத் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு ஏற்கெனவே ஜீவிதா (5) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 7 தினங்களுக்கு முன்பாக புவனேஸ்வரிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன.

இந்நிலையில், இன்று (பிப்ரவரி 13) மதியம் சுமார் 1:30 மணியளவில் இரண்டு குழந்தைகளையும் வீட்டின் நடுவே பாயில் உறங்க வைத்துவிட்டு, புவனேஸ்வரி வீட்டின் மற்றொரு பகுதியில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் குரங்குகளின் சத்தம் கேட்டது. வழக்கம்போல் வீட்டுக்குள் குரங்குகள் வந்து மளிகைப் பொருட்கள், உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்ததால், அதுபோல் குரங்குகள் வந்திருக்கும் எனக் கருதி கழிவறையை விட்டு வெளியே வந்து பார்த்த புவனேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார்.




அப்போது, படுக்கையில் உறங்க வைத்திருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளையும் காணவில்லை. அப்போது, வீட்டின் மேற்கூரையில் குரங்கொன்று, கையில் ஒரு குழந்தையை வைத்திருந்தது. உடனடியாக, புவனேஸ்வரி சத்தம் போட்டதும், உறவினர்கள் ஒன்று கூடினர். பின்னர் எல்லோரும் சேர்ந்து சத்தம் போட்டதும் குழந்தையை மேற்கூரையிலேயே போட்டுவிட்டு குரங்கு சென்றது.

இன்னொரு குழந்தையைத் தேடியபோது, வீட்டின் பின்புறம் உள்ள கோட்டை அகழி எனப்படும் குளத்திலிருந்து குழந்தையின் உடலை உறவினர்கள் மீட்டனர். பின்னர், குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது மருத்துவர்கள் பரிசோதித்து குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதனால் புவனேஸ்வரியும், உறவினர்களும் கதறி அழுதனர். குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top