பயணப்பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலையை தேடி தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கையில் தற்போது பெனி என்ற மோப்ப நாய் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.


அந்த வகையில் குறித்த பெண்ணின் தலை தேடி, சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகரின் வீடு அமைந்துள்ள பகுதியில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


படல்கும்புர 5ஆம் தூண் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின் போது பொலிஸ் நாய் பிரிவின் பெனி என்ற நாயை ஈடுபடுத்தி தேடுதல் நடவடிக்கை தொடர்ந்துள்ளது.


இந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியிலிருந்த வாழைத்தோட்டமொன்றில் இரத்தக்கறைக்கு ஒத்த அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


இதேவேளை குறித்த கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக டேம் வீதி பொலிஸ் பொறுப்பதிகாரி, ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 8 பேர் கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளது.


இந்த விசேட குழுவானது விசாரணைகளுக்காக நேற்று கொழும்பில் இருந்து புத்தல நோக்கி சென்றுள்ளதாக தெரியவருகிறது.


இதேவேளை சம்பவம் தொடர்பிலான விசாரணைகள், சந்தேகநபர் பயணித்த இடங்களில் இருந்து இதுவரை கிடைக்கப் பெற்ற சிசிடிவி காணொளிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை குறித்த நபர் சென்றுள்ள ஏனைய இடங்களிலும் சிசிடிவி காணொளிகளை பெறுவதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


மேலும், கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் சந்தேகநபர் தங்கியிருந்த இடத்தில் ஹங்வெல்ல பொலிஸாரால் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top