தமிழகத்தின் கோவை அருகே அடுத்தவர் தட்டில் இருந்து பரோட்டா எடுத்து உட்கொண்டவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் இடையர்பாளையம் சிவாஜி காலனி சிவகாமி நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 25). இவருக்கு தடாகத்தில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றும் 2 பேர் நண்பர்களாகினர்.

நாளடைவில் நண்பர்கள் வேலை பார்க்கும் செங்கல் சூளைக்கே ஜெயக்குமார் சென்று நண்பர்களுடன் மது அருந்தி வந்தார். இதேபோல நேற்றும் செங்கல் சூளைக்கு சென்று நண்பர்களுடன் மது அருந்தியுள்ளனர்.

அந்த சமயம் செங்கல் சூளையின் பக்கத்து குடியிருப்பில் தங்கியிருந்த வெள்ளிங்கிரி (51) என்பவர் உண்பதற்கு பரோட்டா கொண்டு வந்துள்ளார். மதுபோதையில் இருந்த ஜெயக்குமாருக்கு, வெள்ளிங்கிரி பரோட்டா உண்பதைப் பார்த்து நாக்கு ஊறியுள்ளது. உடனே வெள்ளிங்கிரியிடம் எந்த அனுமதியும் பெறாமல் அவர் சாப்பிட்டுக் கொண்டு இருந்த தட்டிலுள்ள பரோட்டாவை எடுத்து ஜெயக்குமார் உட்கொண்டுள்ளார்.

ஜெயக்குமாரின் இந்த அநாகரீகமாக செயல் வெள்ளிங்கிரிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஜெயக்குமாரை அவர் கண்டித்தார். இதில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது வெள்ளிங்கிரியின் மனைவி பற்றி ஜெயக்குமார் தகாத வார்த்தைகள் பேசினார். இதில் வெள்ளிங்கிரிக்கு மேலும் ஆத்திரத்தை உண்டாக்கியது. அந்த சமயம் ஜெயக்குமார், அங்கு கிடந்த செங்கல்லை எடுத்து வெள்ளிங்கிரியை தாக்கியுள்ளார்.
இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற வெள்ளிங்கிரி, அங்கு கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து ஜெயக்குமாரின் பின் தலையில் தாக்கியுள்ளார். ஜெயக்குமார் சுருண்டு கீழே விழுந்துள்ளார். அதன்பிறகும் ஆத்திரம் தீராத வெள்ளிங்கிரி, தலை மற்றும் முகத்தில் மீண்டும், மீண்டும் அடித்தார். இதில் ஜெயக்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுபற்றி அந்த பகுதியில் தடாகம் பொலிஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பொலிஸார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ஜெயக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வெள்ளிங்கிரி கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி பொலிஸார் சிறையில் அடைக்கள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top