தமிழர்கள் விழித்துக்கொள்ளாவிட்டால் அமெரிக்காவின் பூர்வ குடிகளான செவ்விந்தியர்களின் கதியே எமக்கும் ஏற்படலாம் என தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

அத்துடன், முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததோடு யுத்தம் நின்றுவிடவில்லை எனவும், அரசாங்கம் யுத்தத்தைச் சத்தமில்லாமல் இன்னுமொரு வடிவத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் சமகால அரசியல் உரையரங்கு இடம்பெற்றது. இந்நிகழ்விர் ‘வனவள அரசியல்’ என்னும் தலைப்பில் பொ.ஐங்கரநேசன் உரையாற்றியபோதே இவ்வாறு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அவர் அங்கு உரையாற்றுகையில், “யுத்தம் முடிவடைந்த பின்னர் வனவளத் திணைக்களம் வடக்கில் ஐந்து இலட்சம் ஏக்கர் காடுகளைப் புதிய ஒதுக்குக் காடுகளாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. ஒரு இலட்சம் ஏக்கர் காடுகளைப் பேணல் காடுகளாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

யுத்தகால இடப்பெயர்வின்போது எமது மக்களால் கைவிடப்பட்ட பயிர்ச் செய்கை நிலங்களிலும் மேய்ச்சல் நிலங்களிலும் மரங்கள் வளர்ந்து துணைக்காடுகளாகியுள்ளன. இவற்றையும் உள்ளடக்கியே வனவளத் திணைக்களம் காடுகளின் எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளது. இதற்குள் நாம் நுழைவதைக் காடுகள் பேணல் கட்டளைச் சட்டம் தடை செய்துள்ளது.

வன ஜீவராசிகள் திணைக்களம் தேசியப் பூங்காக்கள் என்ற பெயரில் மன்னாரிலும் சுண்டிக்குளத்திலும் நெடுந்தீவிலும் குடியிருப்புகளையும் பயிர்ச்செய்கை நிலங்களையும் உள்வாங்கி இரண்டே முக்கால் இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பைத் தேசியப் பூங்காக்களாக அறிவித்துள்ளது. நெடுந்தீவின் நான்கில் ஒருபாகம் இதற்குள் அடங்குகிறது.

இவை சரணாலயங்களாக இருந்தவரைக்கும் பிரச்சினைகள் இல்லை. ஆனால், தேசியப் பூங்காக்கள் ஆக்கப்பட்ட பின்னர் இந்த எல்லைகளினுள் மனித நடவடிக்கைகள் பூரணமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. மீறிநுழைந்தால் தண்டிக்கப்படுவோம்.

வனஜீவராசிகள் திணைக்களம் இயற்கை ஒதுக்கிடங்கள் என்ற பெயரில் நாகர் கோவிலிலும், நந்திக்கடலிலும், நாயாற்றிலும், விடத்தல் தீவிலும் ஏறத்தாழ ஒரு இலட்சம் ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளது. இவை மட்டுமல்லாமல், கண்டல்மரங்கள் எங்கெல்லாம் வளர்ந்துள்ளனவோ அந்தப்பகுதிகள் எல்லாம் தன்னுடையது என்ற அறிவிப்பையும் இப்போது வெளியிட்டுள்ளது.

இவை வெளிப்புறப் பார்வைக்கு சூழல் பாதுகாப்புக்குரிய நல்ல நடவடிக்கைகளாகவே தோன்றும். ஆனால், இவற்றின் பின்னால் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கும் சூழல் அரசியல் உருமறைப்பாக உள்ளது.

அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளான செவ்விந்தியர்களின் வாழ்விடங்கள் வந்தேறு குடிகளான ஐரோப்பியர்களால் தேசியப் பூங்காக்களாக அறிவிக்கப்பட்டே அங்கிருந்து அவர்கள் விரட்டப்பட்டார்கள்.

இதனைவிட இஸ்ரேல், கிழக்கு ஜெருசலேமில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் உத்தியாக தேசியப் பூங்காக்களை விரிவுபடுத்தி வருகிறது.

வரலாற்றின் படிப்பினைகளைக் கற்றுக்கொண்டு அரசாங்கம் தொடுத்திருக்கும் இந்தப் பச்சை யுத்தத்தை நாம் சரியான முறையில் எதிர்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top