பெரும் எடுப்பில் பல நூற்றுக்கணக்கான படையினர் சிங்கள மக்கள் பௌத்த துறவிகள் முகக்கவசம் கூட அணியாமல் குருந்தூர் மலையில் விகாரைக்கான வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் நேற்று முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இதன்போது,பௌத்த துறவிகள், வெலிஓயா சிங்கள மக்களின் வழிபாட்டுடன் இராணுவத்தின் முழுமையான பாதுகாப்புடன் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் ஆரம்பிக்கபட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்ச்சையினை ஏற்படுத்திய குமுழமுனையில் அமையப்பெற்ற குருந்தூர் மலையில் ஆண்டு தொடக்கத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வாராச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஆராய்ச்சியின் பயனாக முற்றுமுழுதாக இராணுவத்தின் பாதுகாப்புக்கு மத்தியில் குருந்தூர் மலையில் கடந்த நான்கு மாதங்களாக ஆய்வுகள் எனும் பேரில் தமிழ் பத்திரிகையாகர்களுக்கும் கிராம மக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வுகள் இராணுவம் , தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று இரவு முதல் கோவிட் 19 சுகாதார விதிமுறைகளை மீறி அவசர அவசரமாக முற்றுமுழுதாக படையினரின் ஏற்பாட்டில் தமிழர்கள் எவரும் அனுமதிக்கப்படாமல் குருந்தாவசோக ராஜ்மாஹா விகாரைக்கான பிரித்ஓதல் வழிபாடுகள் இடம்பெற்று விகாரை பூசைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வாராச்சி தொடங்கிய காலத்தில் இருந்து குருந்தூர் மலை முற்றுமுழுதாக படையினரின் கட்டுப்பாட்டின் கீழே கொண்டுவரப்பட்டு அனுமதி இன்றி தமிழர்கள் எவரும் செல்லாதவாறு படையினர் தடைவித்து வந்துள்ள நிலையில் நேற்று முன் தினம் இரவு நூற்றுக்கணக்கான படையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் 30 பௌத்த துறவிகளின் பிரித் ஓதலுடன் பௌத்த சின்னம் நிறுவப்பட்டுள்ளது. அத்துடன், புத்தர் சிலை கொண்டுவரப்பட்டு குருந்தூர் மலை பௌத்த வழிபாட்டு இடமாக மாற்றப்பட்டுள்ளது.

சுகாதார தரப்பினரின் அனுமதிகள் எவையும் இன்றி சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாது முற்றுமுழுதாக இராணுவ மயப்படுத்தபட்டு இந்த பௌத்த விகாரை ஆரம்பித்து வைக்கபட்டுள்ளது. அதோடு விகாரை வழிபாடுகள் இடம்பெற்ற சமயம் தண்ணிமுறிப்பிலிருந்து குமுளமுனை செல்லும் வீதிகள் தோறும் ஆயுதம் தாங்கிய படையினர் நிறுத்தப்பட்டு வீதியால் செல்லும் மக்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு உட்படுத்தபட்டுள்ளனர்.

குருந்தூர் மலைக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் படையிரின் அடக்குமுறைக்குள் தமிழ்மக்கள் முடக்கப்பட்டு குறிப்பாக நாட்டில் கொவிட் 19 என அறிவித்த அரசாங்கம் தமிழ்மக்கள் ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள பல்வேறு தடைகளை விதித்துள்ளது.

இந் நிலையில்,பெரும் எடுப்பில் பல நூற்றுக்கணக்கான படையினர் சிங்கள மக்கள் பௌத்த துறவிகள் முகக்கவசம் கூட அணியாமல் பௌத்த வழிபாட்டு நிகழ்வினை நடத்தியுள்ளமை வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழர்களை படையினரின் அடக்குமுறைக்குள் வைத்திருக்கும் அரசின் செயற்பாடு குருந்தூர், மலையில் வெளிப்படையாக காணக்கூடியதாக உள்ளதாக பலரும் விமர்சனங்கள் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top