கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் உள்ள விடியல் ஆடைத் தொழிற்சாலையின் முன்பாக 03 சிறுவர்களும் தந்தையும் நேற்று உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த தொழிற்சாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 24 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் ஒரு பெண்ணின் பிள்ளைகளும் கணவனுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் கணவர் கூறுகையில், கிளிநொச்சி அக்கராயன் மணியங்குளத்தினைச் சேர்ந்த தன்னுடைய மனைவிக்கு நேற்று பிற்பகல் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்ற போதிலும் தனக்கு குறித்த தகவல் அறிவிக்கப்படவில்லை.

இதன் காரணமாக குழந்தைகளை வைத்துக்கொண்டு தாம் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேருவதாகவும் தம்மை சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது உள்ள சூழலில் கடந்த சில நாட்களிற்கு முன்னரே தொழிலுக்கு செல்ல வேண்டாம் என தாம் மறித்த நிலையில், தொழிற்சாலை ஊழியர்களால் நம்பிக்கையூட்டப்பட்டு தனது மனைவி பணிக்கு அமர்த்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் ஆடைத் தொழிற்சாலை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட எடுத்த முயற்சி நீண்ட நேரத்தின் பின்னர் அவரது மனைவியின் தொலைபேசி உரையாடலின் பின் முடிவுக்கு வந்தது.

மேலும் குறித்த பெண் குணமடைந்து திரும்பும்வரை அக்குடும்பத்திற்கான உதவிகளை வழங்குவதாக தொழிற்சாலை நிர்வாகம் உறுதியளித்திருந்த நிலையில் கணவர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை கைவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் ஒரே நாளில் 261 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்ட நிலையில் ஆடைத் தொழிற்சாலைகளை மூடுமாறு  கோரிக்கைகள்   விடுக்கப்பட்டுவந்த நிலையில்  இன்றுவரை   ஆடைத் தொழிற்சாலைகளை மூட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top