மனைவியை கைகளில் சுமந்து கொண்டு 22 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று வைத்தியசாலையில் சேர்ந்த கணவர் ஒருவர் தொடர்பில் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலி மாவட்டம் ஹினிதும பிரதேசத்தின் கொடிகந்த பகுதியில் வசிக்கும் தம்பதியினர் பற்றியே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் நாடு முழுவதிலும் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில் எஸ்.குமார என்ற இளைஞர் தனது மனைவியை 22 கிலோ மீற்றர் தூரம் சுமந்து சென்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

கர்ப்பிணியான மனைவியின் வயிற்றில் இருக்கும் சிசு இரண்டு நாட்களாக சலனமற்றிருந்த காரணத்தினால் ஐந்து மணித்தியாலத்திற்குள் வைத்தியசாலயில் அனுமதிக்குமாறு குடும்ப நல உத்தியோகத்தர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பிரதேசம் முழுவதிலும் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் எந்தவிதமான போக்குவரத்து வசதியும் இல்லாத காரணத்தினால் குமார தனது மனைவியை இவ்வாறு சுமந்து கொண்டு நடந்தே வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

ஏழு மாத கர்ப்பிணியான சாந்தனி தற்பொழுது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. வறுமையில் இருந்தாலும் தனது மனைவியையும் பிள்ளையையும் காப்பாற்றுவதற்காக 22 கிலோ மீற்றர்கள் சீரற்ற காலநிலையில் அவர்களை சுமந்து சென்று வைத்தியசாலையில் சேர்த்த நெகிழ்ச்சியான சம்பவத்தினால் குமாரவிற்கு சமூக ஊடகங்களில் பாராட்டுக்கள் குவியத் தொடங்கியுள்ளது.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top