கடந்த 2006ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தில் தற்போதைய ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்சவை கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையான அரசியல் கைதியொருவர் இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.


யாழ்.புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட 41 வயதான சந்திரபோஸ் செல்வச்சந்திரன் என்பவரே இவ்வாறு மயக்கமுற்று விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவர் 2006ம் ஆண்டு பயங்கரவாதத் தடைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.


2006 ம் ஆண்டு மார்கழி மாதம் முதலாம் திகதி கொழும்பு ,கொள்ளுபிட்டி பித்தலை சந்தியில் அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோட்டபாய ராஜபக்ஸவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலை குண்டுதாரியால் நடாத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இராணுவ பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மரணத்தை விளைவித்ததுடன், பாதுகாப்பு செயலாளரான கோட்டபாய ராஜபக்ஸ, இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு கடும் காயங்களை ஏற்படுத்தியதுடன், அரச சொத்துக்களுக்கு பெரும் சேதம் விளைவித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.


இது தொடர்பில் சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 14 வருடங்கள் வழக்கு நடைபெற்ற பின்னர், அவர் நிரபராதியென கடந்த வருடம் 2019ம் ஆண்டு மார்கழி மாதம் 18ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top