பயணத்தடை நடைமுறையில் இருந்த வேளை, சுன்னாகம் கந்தரோடையில் வீடொன்றுக்குள் புகுந்து வாளால் வெட்டி அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பலில் இருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு கந்தரோடை சங்காவத்தை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் முகங்களை மறைத்தவாறு முகமூடிகள் அணிந்த வண்ணம் கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டின் முன் கதவை உடைத்துக்கொண்டு கொள்ளையர்கள் வீட்டினுள் புகுந்துள்ளனர். வீட்டில் உள்ளோரை தாக்கி கொள்ளையில் ஈடுபட்டு தப்பிச் சென்றனர்.பெண் ஒருவரின் கழுத்தை நெரித்து அவர் அணிந்திருந்த மூன்று 

பவுண் பெறுமதியான தங்க சங்கிலி, ஒன்றரை பவுண் கை சங்கிலி, இரண்டு மோதிரம், காப்புக்கள் என்பன கொள்ளையிடப்பட்டிருந்தது. கொள்ளை சம்பவத்தில் மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் அவரின் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலில் கொள்ளையில் ஈடுபட்ட நால்வரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட ஒரு பகுதி நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கொள்ளைக் கும்பலில் இருவர் மிகுதி நகைகளுடன் தலைமறைவாகியுள்ளனர்.

இந்தக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் 20 – 26 வயதுடைய சங்குவேலி, தெல்லிப்பழை பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர்கள் இருவரும் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top