கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரு ஆடைத் தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு ஆடைத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இந்த விடயத்தினை கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் செயற்படும் ஆடைத் தொழிற்சாலைகள் ஊடாக கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாய நிலை காணப்படுவதால் அவற்றை தற்காலிகமாக மூடுமாறு கரைச்சி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அதேபோல கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் இரு வேறு வழக்குகளும் தாக்கல் செய்யப்படிருந்தன. இந்நிலையில் நேற்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் ஆகியோருக்கும் ஆடைத் தொழிற்சாலையின் உரிமையாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றிருந்தது.


இதன் போது ஆடைத் தொழிற்சாலைகளை தற்காலிமாக மூடி, தொழிற்சாலைகளை தொற்றுநீக்கலுக்கு உட்படுத்தி தொழிலாளர்களை பரிசோதனைகளுக்கு முழுமையாக உட்படுத்தி சுகாதாரத் துறையினரின் சம்மதத்துடன் மீளத் திறப்பதற்கு உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஏற்கனவே கர்ப்பவதிகளுக்கு விசேட விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது ஆடைத் தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுகின்ற நிலையிலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழமை போலவே கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் உரிமையாளர்கள் வாக்குறுதி வழங்கியதாக கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகதன் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top