பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் போராளியான மலாலா, பெண்களின் கல்வி உரிமைக்கான குரல் கொடுத்ததால், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானவர்.


2012 ஆம் ஆண்டு, பெண்களுக்கான உரிமை குறித்து பிரசாரத்தில் ஈடுபட்டபோது தலிபான்களால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றார் மலாலா. மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்ட அவர், பயந்து ஒதுங்கிவிடாமல் தனது கருத்துக்களை முன்பைவிட வலுவாக முன்வைத்தார்.


2013 ஆம் ஆண்டு மலாலா தனது 16ஆவது பிறந்தநாளான ஜூலை 12-ல் ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் சபை "மலாலா தினம்" என்று குறிப்பிட்டது.


பெண் கல்வி உரிமைக்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும் தொடர்ந்து பிரசாரம் செய்து வரும் மலாலாவுக்கு, 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஐ.நா.வின் இளைஞர் தூதராகவும் அவர் இருக்கிறார். பெண்களின் உரிமை மட்டுமல்லாமல் சர்வதேச அமைதிக்காகவும் குரல் கொடுத்து வருகிறார் மலாலா.


இந்தியா மற்றும் பாகிஸ்தானின் உண்மையான எதிரி வறுமை, பாகுபாடு மற்றும் சமத்துவமின்மை என்று சுட்டிக்காட்டிய மலாலா, இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் சண்டையிடாமல், கைகோர்த்து அதற்கு எதிராகப் போராட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள மக்கள் நிம்மதியாக வாழ விரும்புகிறார்கள், இரு நாடுகளும் நல்ல நண்பர்களாக மாறுவது தான் தனது கனவு என்றும் குறிப்பிடுகிறார் மலாலா.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top