இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை விடயங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள பலவீனமான முன்வரைவு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி வேண்டி யாழில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றினூடாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் இதய சுத்தியுடன் செயற்பட்டு இலங்கை அரசு மீதான காத்திரமான நிலைப்பாட்டை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் இதனை அறிவித்துள்ளதுடன் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், “தமிழின அழிப்பிற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் தமிழினம் திட்டமிடப்பட்டு இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். தமிழர்களின் பூர்வீக நிலங்கள், மதத் தலங்கள் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு இன்றும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

தமிழர்களாகிய நாம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கும் எதேச்சதிகாரத்திற்குள்ளும் சிக்குண்டு வாழ்ந்து வருகின்றோம். தமிழர்களின் தொல்லியல் அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் வீதிகளில் இன்றும் போராடிக் கொண்டே இருக்கிறோம்.

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் கடந்த 11 வருடங்களாக சர்வதேசத்தால் எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் தோல்வியாக இருந்தும்கூட மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பாக மிகவும் பலவீனமான முன்வரைபே, சில நாட்களுக்கு முன்னரும் வெளியிடப்பட்டுள்ளது.

இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழினம் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் நீதிவேண்டி அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையிலும்கூட இலங்கை விடயங்களைக் கையாளும் முக்கிய நாடுகளின் குழுவினரால் வெளியிடப்பட்ட இந்த முதல் அறிக்கை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் சர்வதேசத்தின் மீது நம்பிக்கையீனங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை விடயங்கள் தொடர்பாக சர்வதேச நாடுகள் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்க வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

இபந்தப் போராட்டத்திற்கு, வலுச்சேர்க்கும் வகையில் சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், பொது அமைப்புகள், பொதுமக்கள், தமிழ் தேசிய அரசியல் பிரதிநிதிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top