யாழ்ப்பாணம் – மணியந்தோட்டம் பகுதியில், 8 மாதம் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைதாகிய பெண்ணை சட்ட மருத்துவ வல்லுநர் முன்னிலையில் முற்படுத்தி மனநிலை பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ். மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குழந்தையின் உடல்நிலை தொடர்பில் சட்ட மருத்துவ வல்லுநரின் அறிக்கையைப் பெறுவதற்காக இருவரையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை தாயார் அடித்து துன்புறுத்திய காணொளிப் பதிவு சமூக வலைத்தளங்களில் நேற்றிரவு பரவியது.

அதனையடுத்து நல்லூர் பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலில் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் யாழ்ப்பாணம் பொலிஸாரும் இணைந்து துன்புறுத்தலுக்கு உள்ளான குழந்தையை இன்று காலை மீட்டனர்.

மேலும் குழந்தையை துன்புறுத்திய தாயாரைக் கைது செய்த பொலிஸார், வாக்குமூலத்தைப் பெற்ற பின்னர் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் (சிறுவர் நீதிமன்றம்) முற்படுத்தினர்.

சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த மேலதிக நீதவான், தாயாரையும் குழந்தையும் சட்ட மருத்துவ வல்லுநர் முன்னிலையில் முற்படுத்த வசதியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்க உத்தரவிட்டார்.

அத்துடன், தாயாரின் மனநிலை தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரி ஊடாக உளநல மருத்துவ வல்லுநரிடம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதின்றம் உத்தரவிட்டது.

திருகோணமலையைச் சேர்ந்த 24 வயதான பெண், கணவர் அரபு நாடு ஒன்றில் தொழில்வாய்ப்புப் பெற்றுச் சென்ற நிலையில் யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top